ஒரு ஊரில் ஒருவன் காட்டிற்கு சென்று விறகு வெட்டி விற்று தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். ஏழ்மையான வாழ்க்கையே அவனால் வாழ முடிந்தது. ஒரு நாள் காட்டிற்கு விறகு வெட்ட சென்று மரத்தின் மீது ஏறி விறகு வெட்டிக்கொண்டு இருக்கும்போது அவனிடம் இருந்த ஒரு கோடரியும் தவறி அங்கிருந்த பெரிய ஆற்றில் விழுந்து விட்டது. இதை கண்ட அவன் கதறி அழ தொடங்கினான். என்னிடம் இருந்த ஒரு கோடரியும் போய் விட்டதே இனி எப்படி என் குடும்பத்தை கவனித்து கொள்வேன் என்று கடவுளை நோக்கி வேண்டினான்.
அவ்வேளை ஒரு தேவதை அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் நான் தருகிறேன் என கூறியது. அதற்கு அவன் கேட்டதெல்லாம் கிடைக்கும் ஒரு வரம் வேண்டும் என கூறினான். அதற்கு அந்த தேவதை ஒரு வரம் என்ன மூன்று வரம் உனக்கு தருகிறேன் உனக்கு வேண்டியதை சொல்லிக்கொண்டு இதில் இருக்கும் மூன்று விதைகளில் ஒன்றை கீழே போட்டால் நீ கேட்ட வரம் உனக்கு கிடைக்கும் என்றது.
அவனும் மிக்க மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு போய் மனைவியிடம் நடந்தவற்றை கூறினான். அதற்கு மனைவி நிறைய பணம் கேளுங்கள் என்று கூறினாள். கணவனோ இல்லை நிறைய பொருள் கேட்போம் என கூறினான். இருவரும் திரும்ப திரும்ப அவர்கள் கூறியதை கேட்டு வாதித்துக்கொண்டனர். அப்போது கணவன் சரி கதையை முடி முடி என்று சொல்லும்போதே கையில் இருந்த ஒரு விதை தவறி கீழே விழுந்துவிட்டது. இதனால் இருவர் உடம்பு முழுவதும் முடி வந்து மிருகம் போல் ஆகி விட்டனர்.
இப்போது கணவன் மனைவியை உன்னால்தான் இப்படி ஆகிவிட்டது என்று திட்டிக்கொண்டே உடம்பில் உள்ள எல்லா முடிகளும் இல்லாமல் போகட்டும் என்று கூறி அடுத்த விதையை போட்டான். இப்போது அவர்கள் உடம்பில் இருந்த எல்லா முடிகளும் போய்விட்டது. தலைமுடிகூட போய் மொட்டைத்தலையோடு இருந்தனர்.
அதற்கு பிறகு இருவரும் கலந்தாலோசித்து இதற்கு என்ன செய்யலாம் என நன்றாக யோசித்து ஒரு மனிதனுக்கு எங்கு எங்கெல்லாம் முடி இருக்கனுமோ அங்கெல்லாம் பழைய மாதிரியே முடி வரட்டும் என கூறி இருந்த கடைசி விதையையும் கீழே போட்டனர். இப்போது அவர்கள் முன்பு இருந்த மாதிரியே அவர்கள் உடம்பில் எல்லா முடிகளும் வந்தது.
இக்கதையில் இரண்டு கருத்து உள்ளது. முதலாவது நமக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்த வேண்டும். இரண்டாவது மிக முக்கியமான தீர்மானங்களை நாம் மேற்கொள்ளும்போது எல்லோரிடமும் நன்றாக கலந்தாலோசித்து சரியாக செய்ய வேண்டும். சண்டையிட்டுக்கொள்வதால் இங்கு எதுவும் நடக்கபோவதில்லை. மாறாக இன்னும் அதிகமாக பிரச்சினைகளே உருவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக