ஒரு நாள் மூன்று நண்பர்கள் ஒரு படகில் கடலில் சவாரி செய்துக்கொண்டு இருக்கும்போது திடீர் என பெரிய அலை வந்து படகை புரட்டிப்போட்டது. மூவரும் தத்தளித்து தடுமாறி நீந்தி ஓர் ஆள் நடமாற்றம் இல்லாத குட்டித்தீவில் கரைசேர்ந்தனர்.
இப்போது எப்படி நமது சொந்த நாட்டுக்கு செல்வது என யோசித்தனர். கப்பல் எதுவும் அவ்வழியாக வரவில்லை. மூவரும் பயந்துபோய் கடவுளை நோக்கி எங்களை காப்பாற்றும் கடவுளே என மன்றாடினார்.
அப்போது கடவுள் அவர்கள் முன் தோன்றி உங்களுக்கு என்ன வேண்டும் என கேளுங்கள். ஒருவருக்கு ஒரு வரம் மட்டுமே தருவேன் என கூறினார். அதற்கு முதலாவது நண்பன் கடவுளே எனக்கு அமெரிக்க நாட்டில் பெரிய பணக்காரனாக வாழ வேண்டும் என்னை அப்படி மாற்றும் என கேட்டான். கடவுளும் அவன் கேட்டதையே செய்து அவனை பெரிய பணக்காரனாக மாற்றி அமெரிக்காவில் கொண்டு போய் விட்டார்.
இரண்டாவது நண்பனும் வந்து கடவுளே என்னையும் அவனை போல் பெரிய பணக்காரனாக மாற்றி இங்கிலாந்தில் கொண்டு போய் விடும் என கூறினான். கடவுளும் அவன் கேட்டதை போலவே பெரிய பணக்காரனாக மாற்றி இங்கிலாந்தில் குடியேற்றினார்.
இப்போது மூன்றாவது நண்பன் வந்ததும் கடவுள் அவனிடம் உனக்கு என்ன வேண்டும் என கேட்டார். அவனோ இப்போது என்னிடம் இருந்த இருவரையும் அவர்கள் முன்பு எப்படி இருந்தார்களே அதே போல கொடுத்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு திரும்ப இங்கேயே கொண்டு வந்து விட்டுவிடுங்கள் என கேட்டான். கடவுள் கொடுத்த வாக்கை காப்பாற்ற அவன் கேட்டதை போலவே அவர்கள் இருவரையும் திரும்பவும் அதே ஆள் நடமாற்றம் இல்லாத அத்தீவுக்கு கொண்டு வந்து விட்டுவிட்டு மறைந்துவிட்டார்.
நமக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை நாம் இன்னொருவரை வீழ்த்துவதற்கு பயன்படுத்தகூடாது. நாம் முயற்சி செய்து முன்னேறனுமே ஒழிய இன்னொருவரை வீழ்த்தி முன்னேற நினைக்கக்கூடாது. அப்படி செய்தால் நாம் அதே இடத்தில்தான் இருப்போம் ஒழிய முன்னேற மாட்டோம்.